உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டை விடுவிக்க கட்டளையிட்ட தேசபந்து! சபையை அதிர வைத்த முஜிபூர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டை, களனிகம வெளியேறும் இடத்தில், பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பாரவூர்தியை, விடுவிப்பதற்கு கட்டளையிட்டவர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mohamed Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
அத்துடன் எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் செல்லும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கு நீதிமன்றத்துக்கு செல்லாததற்கான காணம் அவர்களுக்கிடையில் இருந்து டீலே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (5) இடம்பெற்ற அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் பிரிவின் பிரகாரம், தேசபந்து தென்னகோனை காவல்துறைமா அதிபர் பதவியில் இருந்து அகற்றுவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிமன்றம் செல்லாததற்கான காரணம்
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், ”தேசபந்து தென்னகோனை காவல்துறைமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவைக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது, அன்று அரசியலமைப்பு பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எமது கட்சியின் கபீர் ஹாசிம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
எனினும் அன்றிருந்த அரசாங்கம் அவரை சட்டவிராேதமான முறையில் நியமித்துக்கொண்டபோது, அவரின் பதவியை இடைநிறுத்துமாறு தெரிவித்து எமது கட்சியின் ஹிருனிகா பிரேமசந்திர மற்றும் நிராேஷன் பாதுக்க ஆகியோர் உயர் நீதிமன்றில் இடைக்கால தடை உத்தரவொன்றை பெற்றுக்கொண்டனர்.
அதனால் தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கு நாங்கள் ஆரம்பத்தில் இருந்து சரியான நிலைப்பாட்டில் இருந்தோம். ஆனால் அன்று இந்த சபையில் மக்கள் விடுதலை முன்னணி 3 உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைத்து விடயங்களுக்கும் நீதிமன்றம் செல்வார்கள்.
ஆனால் தேசபந்து தென்னகோனின் பதவியை இடைநிறுத்த நீதிமன்றம் செல்லவில்லை. ஏன் செல்லவில்லை என்பதை ஜனாதிபதியிடம் கேட்டுப்பாருங்கள். அவர்களுக்கிடையில் இருந்து டீலே இதற்கு காரணமாகும்.
வழக்குகளை மீளப்பெற்றுக்கொள்ளல்
தேசபந்துவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இந்த சபையில் தெரிவிக்கப்பட்டன. அவருக்கு எதிரான விசாரணை குழுவின் அறிக்கையில் டபிள்யு 15 தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் மாத்திரமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு எதிராக இங்கு தெரிவிக்கப்படாத குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டை, களனிகம வெளியேறும் இடத்தில், பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பாரவூர்தியை, விடுவிப்பதற்கு கட்டளையிட்டவர் தேசபந்து தென்னகோன் என்ற குற்றச்சாட்டு ஏன் தெரிவிக்கப்படவில்லை.
அதேபோன்று இளைஞர்களின் போராட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக அன்று தேசபந்து தென்னகோன் வழக்கு தொடுத்தவர்கள், இன்றும் நீதிமன்றம் செல்கிறார்கள்.
அரசியல் தீர்மானம் ஒன்று எடுத்து அவர்களை விடுவிக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது. அந்த வழக்குகளை மீளப்பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
அரச அதிகாரிகளுக்கு ஆலாசனை
அத்துடன் யுக்திய செயற்பாட்டின்போது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அரசாங்கம் விசாரணை மேற்கொள்கின்றதா? இதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? அதனால் அரசாங்கம் குற்றச்சாட்டு உள்ளவர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்காத வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்.
தேசபந்து தென்னகோன் சட்டத்துக்கு அப்பால் சென்று இவ்வாறு செயற்பட, அவருக்கு ஆலாேசனை வழங்க அரசியல்வாதிகளும் இருந்தார்கள். அவர்கள் தொடர்பில் யாரும் கதைப்பதில்லை.
அன்றிருந்த அரசியல் தலைவர்களின் தேவையை நிறைவேற்றச்சென்றதாலே தேசபந்துக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்.
தேசபந்து தென்னகோனிடமிருந்து தற்போது அரச அதிகாரிகளுக்கு கற்றுக்கொள்ள பாடம் இருக்கிறது. அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப, சட்டத்துக்கு முரணாக செயற்பட்டால் தேசபந்துக்கு இடம்பெற்ற நிலையே ஏற்படும். அவர்களை பாதுகாக்க அரசியல்வாதிகள் யாரும் முன்வர மாட்டார்கள்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
