தேஷபந்து தென்னகோனை எதிர்க்கும் ஜே.வி.பி : நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு
சிறிலங்காவின் காவல்துறை மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்படுவதை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கான அனுமதியை அரசியலமைப்பு பேரவை சிறிலங்கா அதிபருக்கு வழங்குவதை தடுக்குமாறு, அந்த கட்சியின் சட்டத்தரணியான ஹர்ஷன நாணயக்கார குறித்த மனுவின் மூலம் கோரியுள்ளார்.
குற்றச்சாட்டு
தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட காவல்துறையினர், கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது தங்கள் கடமைகளை சரிவர செய்ய தவறியதாக அதிபர் விசாரணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், காலிமுகத்திடல் போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையும் தடுக்க தேஷபந்து தென்னகோன் தவறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலிமுகத்திடல் தாக்குதல்
இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் காலிமுகத்திடலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் பதில் காவல்துறை மா அதிபருக்கு தொடர்பு இருப்பதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்திருந்தது.
இதையடுத்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது.
மேலும், தேஷபந்து தென்னகோனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பாணை பிறப்பித்திருந்ததாகவும் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறை மா அதிபர்
இந்த பின்னணியில், காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டு, தேஷபந்து தென்னகோனுக்கு மேலும் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டால் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் பாதுகாப்பு பாரியளவில் பாதிக்கப்படுமென மனுதாரர் கூறியுள்ளார்.
இதற்கமைய, தேஷபந்து தென்னகோன் ஸ்ரீலங்கா காவல்துறை மா அதிபராக நியமிக்கப்படக் கூடாதென ஹர்ஷன நாணயக்கார கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |