மர்ம முடிச்சுக்களுடன் சி. டி. விக்ரமரத்னவின் மரணம் - துப்பாக்கி கொடுத்த அதிகாரி பரபரப்பு வாக்குமூலம்
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் காவல்துறை மா அதிபரின் பாதுகாப்பிற்காக இரண்டு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்தச் சம்பவத்தின் போது அவர்களில் ஒருவர் கடமையில் இருந்தார்.
விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டுக்கொள்ளப் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, காவல்துறை திணைக்களத்தால் அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரி வாக்குமூலம்
இவ்வாறான பின்னணியில், முன்னாள் காவல்துறைமா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் பாதுகாப்பு காவல்துறை அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

உடற்பயிற்சி செய்வதற்காக தனது அறையை விட்டு வெளியே வந்த அவர், அங்கிருந்த தனது பாதுகாப்பு அதிகாரியிடம் கைத்துப்பாக்கியைக் கேட்டுப் பெற்று தன்னை தானே துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அதிகாரி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
“நேற்று காலை 7.00 மணியளவில், சர், உடற்பயிற்சி செய்யத் தயாராகி அறையை விட்டு வெளியே வந்து, எந்த துப்பாக்கியை பயன்படுத்துகிறாய் என என்னிடம் கேட்டார்.
வெடிப்பு சத்தம்
நான் எனது கைத்துப்பாக்கியின் மேகசினை கழற்றிவிட்டு அவரிடம் கொடுத்தேன். அந்த மேகசினையும் என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டார்.

அதன் பின்னர் ஒரு தண்ணீர் போத்தல் எடுத்து வருமாறு என்னிடம் கூறினார். நான் அதை எடுக்க சமையலறைப் பகுதிக்குச் சென்றபோது, வெடிப்பு சத்தம் கேட்டது.
நான் ஓடி வந்து பார்த்தபோது, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தார்” என முன்னாள் காவல்துறைமா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் பாதுகாப்பு காவல்துறை அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்… 12 மணி நேரம் முன்