இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் ரணிலை சந்தித்தார்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஆகியோர், நேற்று (01) அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.
இலங்கையில் அரச சேவையில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்த உதவுவது மற்றும் பயனுள்ள கண்காணிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரச நிறுவனங்களின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கண்டறிவதே பாரத் லாலின் இலங்கை விஜயத்தின் நோக்கமாகும்.
அரச சேவையில் பயனுள்ள மாற்றம்

மக்கள் சேவைகளை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் இதன் மூலம் பல பில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்துள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் பாரத் லால் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் அரச நிர்வாகம் மற்றும் அரச கொள்கை தொடர்பான பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு ஆதரவளிக்குமாறு பாரத் லாலிடம் அதிபர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்வில் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.