திலீபனின் சிலை வைப்பு விவகாரம்:விடுதலைப் புலிகளை மையப்படுத்தி யாழ். முதல்வரிடம் விசாரணை
தியாகி திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரிந்திருந்தும், அவரது சிலையை நிறுவ அனுமதி வழங்கியது ஏன்? என யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மதிவதனியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) விசாரணை நடத்தியுள்ளனர்.
தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு சிலை நிறுவ அனுமதி வழங்கியமை தொடர்பில், நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாநகர சபை அலுவலகத்தில் சுமார் இரண்டு மணி நேரம் முதல்வரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, சிலை நிறுவுவதற்கான அனுமதி, சிலை உருவாக்கப்பட்ட விதம், அது தயாரிக்கப்பட்ட இடம், அனுமதி வழங்கப்பட்டபோது சபையில் பிரசன்னமாகியிருந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் காவல்துறையினர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அகிம்சை வழியில் உண்ணாவிரதம்
விசாரணையில் நான்கு காவல்துறையினர் பங்கேற்றதாகத் தெரியவருகின்றது. “ஆயுதப் போராட்டத்தில் உயிரிழக்கவில்லை; அகிம்சை வழியில் உயிர் துறந்தவர்!” காவல்துறையினரின் கேள்விகளுக்குப் பதிலளித்த மாநகர முதல்வர், திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியும் என்றாலும், அவர் ஆயுதம் ஏந்திய போரில் உயிரிழக்கவில்லை என்றும், அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்தவர் என்பதன் அடிப்படையிலேயே அவரது நினைவாகச் சிலை நிறுவ அனுமதி வழங்கப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.

திலீபன் சிலை விவகாரம் தொடர்பில் இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 17ஆவது நபராக மாநகர முதல்வரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசாரணைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தமிழ் தரப்பிலிருந்து தங்களுக்கு அழுத்தங்கள் இருப்பதாகவும், அதன் காரணமாகவே இந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |