குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டயானா கமகே : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்குத் தண்டனை விதிப்பது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, டயானா கமகேவுக்குத் தண்டனை விதிப்பதற்காக குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய, பிரதிவாதியான டயானா கமகேவை முன் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, பிரதிவாதியின் கைவிரல் அடையாளங்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
டயானா கமகே 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
இது தொடர்பில், குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் டயானா கமகேவுக்கு எதிராக இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கு இன்று (26) காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பிரதிவாதியான டயானா கமகே நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது, பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மொஹான் செனவிரத்ன நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், இக்குற்றச்சாட்டுக்களுக்குத் தாம் குற்றமற்றவர் என முன்னர் முன்வைத்த எதிர்வாதத்தைப் பிரதிவாதி மீளப் பெற்றுக்கொண்டு, அக்குற்றச்சாட்டுக்களுக்குக் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தார்.
அதற்கமைய, அவ்விடயத்தைப் பதிவு செய்து கொண்ட நீதவான், பிரதிவாதிக்குத் தண்டனை விதிப்பதற்காக இவ்வுழக்கை மீண்டும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.
அத்தினத்திற்கு முன்னதாகப் பிரதிவாதியின் கைவிரல் அடையாளங்களைப் பெற்று அறிக்கை கோருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டயானா கமகே
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்
செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பான குற்றச்சாட்டைத் தாம் ஒப்புக்கொள்வதாக டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
வழக்கு விசாரணை
இந்த வழக்கு இன்று (26) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மொஹான் செனவிரத்ன, குறித்த குற்றச்சாட்டைப் பிரதிவாதி ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைகள் சற்று நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |