மது போதையில் குழப்பம் - 6 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில்
யாழ்ப்பாணத்தில் மது போதையில் குழப்பம் விளைவித்த 6 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் , வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்குச் சென்று நேற்று முன்தினம்(23) பொழுதை கழித்துள்ளனர்.
காவல்துறையினருடன் முரண்பாடு

அதன் போது, அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என , கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த காவல்துறையினருடன் வாக்குவாதப்பட்டு, அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.
அது தொடர்பில் உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து, கடற்கரைக்கு விரைந்த காவல்துறையினர் 06 ஆண்கள் 4 பெண்கள் என 10 பேரை கைது செய்தனர்.
மேலதிக விசாரணை

கைது செய்தவர்களை வட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை, 4 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , 06 ஆண்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் கனேடிய பிரஜைகள் எனவும், ஒருவர் லண்டன் பிரஜை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.