மரணச் சான்றிதழ்கள் இனி டிஜிட்டல் முறையில்! வெளியாகியுள்ள அறிவிப்பு
டிஜிட்டல் முறையிலான மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.
மின்னணு மக்கள் தொகை பதிவேட்டுத் திட்டத்தின் (e-Population Register Programme) கீழ், முதல் கட்டமாக இத்திட்டம் தற்போது களுத்துறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இதுவரை காலமும் கைப்பட எழுதப்பட்டு வழங்கப்பட்ட மரணச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, கணினி அடிப்படையிலான தரவுத்தளம் மூலமாகவே இனி சான்றிதழ்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சிறப்பு QR குறியீடு
இந்த டிஜிட்டல் முறையின் மூலம், அதிகாரிகளால் புதுப்பிக்கப்பட்ட தனிப்பட்ட தரவு அமைப்பைப் பராமரிக்கவும், நிறுவனங்களுக்கு இடையே திறமையான முறையில் தரவுகளைப் பரிமாறிக்கொள்ளவும் முடியும்.

இதேவேளை, பாதுகாப்பான தரவுச் சேமிப்பு முறைமையின் மூலம் தகவல்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
புதிய அமைப்பின் கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு மரணச் சான்றிதழிலும் ஒரு சிறப்பு QR குறியீடு இடம்பெற்றிருக்கும். இதன் மூலம், டிஜிட்டல் தளம் வழியாகச் சான்றிதழின் நம்பகத்தன்மையை எவரும் விரைவாகச் சரிபார்க்க முடியும்.
மேலும், இச்சான்றிதழ்கள் சிறப்புப் பாதுகாப்பு அம்சங்கள் பொறிக்கப்பட்ட பிரத்யேகத் தாளில் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |