பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான்: ரவிகரன் எம்.பி சபையில் கருத்து
தியாகதீபம் திலீபனின் நோக்கமும், அவரின் எண்ணமும் இதுவரை நிறைவேறவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கின்றான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர் உரிமைகள்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ ஈழத்தமிழர்களின் உரிமைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் நோன்பிருந்து உயிர்துறந்த தியாகதீபம் திலீபன் அவர்களுக்கு இந்த உயரிய சபையில் முதற்கண் அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இராசையா பார்த்தீபன் என்னும் இயற்பெயரைக்கொண்ட தியாகச்செம்மல் திலீபன் அவர்கள் தமிழர்களின் உரிமைக்காக தனது இன்னுயிரைத் துறந்து 38 வருடங்கள் ஆகியுள்ளன.
ஆனாலும், ஈழத்தமிழர்கள் தற்போதும் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலே தமிழர் தாயகப்பரப்பில் வாழ்ந்து வருகின்றனர். தமிழர் தாயகப்பரப்பில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தற்போதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடர்ந்தும் தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழர் தாயகப்பரப்பில் அதிகரித்த இராணுவமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே தியாகதீபம் திலீபன் எந்த நோக்கத்திற்காக பசித்திருந்து தனது இன்னுயிரைத் தியாகித்தாரோ அந்த நோக்கமும், அவரின் எண்ணமும் இதுவரை நிறைவேறவில்லை. அந்தவகையிலே பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கின்றான் என்பதை இவ்வுயரியசபையிலே பதிவுசெய்துகொள்ள விரும்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

