தினேஷ் ஷாப்டரின் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆயுள் காப்புறுதி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கையின் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சார்பாக அவரின் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆயுள் காப்புறுதி பலன்களை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்துமாறு அதனுடன், தொடர்புடைய காப்புறுதி நிறுவனங்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவல்துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
தினேஷ் ஷாப்டரின் மரணம் அண்மையில் நீதிமன்றினால் குற்றமாக தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தீர்ப்பு வழங்கப்பட்டது
கொழும்பு நீதவான் நீதிமன்றம் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் அவரது கழுத்து மற்றும் முகப் பகுதியில் ஏற்பட்ட வெளிப்புற அழுத்தத்தின் விளைவாக நிகழ்ந்தது என்று கடந்த முதலாம் திகதி தீர்ப்பளித்தது.
அவரது மரணம் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழு சமர்ப்பித்த பிரேத பரிசோதனையின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்படி, இந்த சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த நீதவான், குறித்த சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
2022 இல் உயிரிழந்தார்
ஜனசக்தி குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்துக்கு அருகில் தமது மகிழுந்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.
பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.