மின்சார சபை ஊழியர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை : மின்சக்தி அமைச்சரின் அறிவிப்பு
பணிக்கு சமூகமளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்சார சபை ஊழியர்களின் சேவையை இடைநிறுத்தி, தற்போதுள்ள சட்ட விதிகளின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, மின்சார சபைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் குறித்த தகவல்களை அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறும் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 3, 4, 5 ஆம் திகதிகளில் சில ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணத்தால், பொதுச் சேவைகள் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு
விசேட வர்த்தமானி மூலம் மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் 2 ஆம் திகதி முதல் இரத்துச் செய்து அந்த சேவைகள் அத்தியாவசியமானது என எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும்அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை மின்சார சபையை 6 பிரிவுகளாக பிரிப்பது தொடர்பிலான உத்தேச சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் உத்தேச சட்டமூலத்தை மீளப்பெறுமாறு இதன்போது போராட்டக்காரர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |