புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை (படங்கள்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று (05) முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயாராக மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி கிராம அலுவலர் பகுதியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த கிராம அமைப்புக்கள், இளைஞர்கள் ஒன்றுதிரண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கைதுசெய்யும் நடவடிக்கைகள்
அந்தவகையில் தமது கிராமத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களை இனங்கண்டு அவர்களை காவல்துறையினரின் உதவியுடன் கைதுசெய்யும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய குறித்த பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் நேற்றைய தினம் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைவாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத் தலைமையில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
45 லீற்றர் கசிப்பு மீட்பு
குறித்த நடவடிக்கையில் கிராம சேவையாளர், கிராம அபிவிருத்தி சங்கம், கிராம மக்கள் மற்றும் இளைஞர்களை இணைந்து கொண்டிருந்தனர்.
அப்பகுதியை சுற்றிவளைத்த காவல்துறையினர் உட்பட்ட குழுவினர் விற்பனைக்கு தயாரான நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டிருந்தத நிலையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
இதேவேளை திம்பிலி கிராம மக்கள் மற்றும் இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு எனவும், போதைப்பொருள் பாவனையை ஒழிக்க முன்வந்திருந்தமை பாராட்டத்தக்கது என புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |