ரணில் பக்கம் சென்றவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை : பின்வாங்கியது மொட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தேர்தலில் ஆதரவளிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நூற்றி இரண்டு உறுப்பினர்களுக்கு எதிராக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும், கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு அண்மையில் தீர்மானித்திருந்தது.
உரிய நேரத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை
இதன்போது, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றி கொள்வது தொடர்பான செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன், கட்சியில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய நேரத்தில் அவர்கள் நீக்கப்படுவார்கள் என்று பொதுச் செயலாளர் கூறினார்.
நாடாளுமன்றம் இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என்றும், இந்தக் காலக்கட்டத்தில் எம்.பி.க்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு மேலும் கால அவகாசம் எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் அனாதை
எவ்வாறாயினும் கட்சியின் வேட்பாளரை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும், எம்.பி.க்களுக்கு கடிதம் எதுவும் அனுப்பாமலேயே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் அனாதையாகவே காணப்படுவதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியில் இருந்து விலகிய எம்.பி.க்கள் குழுவுக்கு கட்சி வேட்புமனு வழங்க மாட்டாதா என்று கேட்டபோது, அது குறித்து நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் போது முடிவெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |