சுதந்திரக் கட்சி செயற்குழு உறுப்பினர்களின் பதவி நீக்கம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு பதவிகளில் இருந்து துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake), லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) மற்றும் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) ஆகியோரை நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளிலிருந்து துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் கடந்த சனிக்கிழமை (30) நீக்கப்பட்டனர்.
சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபைக் கூட்டம் அன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
புதிய நியமனம்
இதன்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட துமிந்த திசாநாயக்கவுக்கு பதிலாக மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் கே.பி.குணவர்தன (K.p-Gunawardana) நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட லசந்த அழகியவண்ணவுக்கு பதிலாக மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஹெக்டர் பெத்மகே (Hector Bethmage) நியமிக்கப்பட்டார்.
அத்துடன் சிரேஷ்ட உபதலைவராக இருந்த மகிந்த அமரவீரவுக்கு பதிலாக சரத் ஏக்கநாயக்க ( Sarath Ekanayake) நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |