யாழில் NPP - கஜேந்திரகுமார் அணி இடையே தொடரும் முறுகல் : கடுமையாக சாடும் அமைச்சர்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இறுதி நாளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த சம்பவத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், கஜேந்திரகுமார் (Gajendrakumar Ponnambalam) அணி தங்கள் மீது சேறு பூசுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடந்த ஒரு வார காலமாக திலீபன் நினைவேந்தல் நடைபெற்றது. அங்கு அனுஷ்டிப்பை செய்ய நாங்கள் சென்றபோது தடுக்கப்பட்டோம்.
துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
அதன் பிறகு சில தினங்களுக்கு முன்னர் இறுதி நாள் நினைவேந்தல் நடந்து முடிந்தது. அன்று யாரோ ஒருவர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாகவும் அவர் மீது தங்கள் வன்முறையை கஜேந்திரகுமார் அணி கையாண்டதாகவும் அதேபோன்று நியாயத்தன்மையை கேட்க சென்ற வேறு சிலரும் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. இதில் எந்த பங்களிப்பும் கிடையாது. அந்த அளவுக்கு கீழ்த்தரமான வேலை எம்மிடம் கிடையாது.
நாங்கள் ஆளும் கட்சி என்ற வகையில் சின்ன சின்ன சிலும்பல் வேலைகளுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமாக இருந்தால் இதைவிட வேறு விதமாக எடுக்க முடியும். அந்த சின்னத்தனமான வேலைகளை நாங்கள் செய்வதில்லை.
அனுஷ்டிப்பதற்கு உரிமை
மனிதனை அனுஷ்டிப்பதற்கு போராடுவதற்கோ கருத்து சொல்வதற்கோ பூரணமான சுதந்திரம் இருக்கின்றது. ஊடக சுதந்திரத்தை எடுத்துக் கொண்டாலும் சரி கருத்து சுதந்திரத்தை எடுத்துக் கொண்டாலும் சரி முன்னரை விட தற்போது அதிகமாக இருப்பதனாலேயே, சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் எமக்கு எதிராக பிரசாரங்கள் செய்யப்படுகிறது.
போராடுவதற்கான உரிமை இருப்பதன் காரணமாகவே கடந்த காலங்களை போன்று புலனாய்வு பிரிவினராலும் இராணுவத்தினராலும் காவல்துறையினராலும் எந்தவித இடையூறும் இல்லாத காரணமாகவே இந்த வன்முறையை கையாளுகின்ற கஜேந்திரகுமார் அணி எங்கள் மீது சேறுகளை வீசுகின்றார்கள்.
இந்த நபர்களுக்கு வேறு அரசியல் கிடையாது. இவர்களுக்கு இருக்கின்ற அரசியல் எங்கள் மீது சேறு வீசுவதை தவிர வேறு எதுவும் கிடையாது. சகல அபிவிருத்தி திட்டங்களையும் எதிர்க்கின்றவர்களாக மாறி இருக்கிறார்கள்.
17 வருடங்களுக்கு பிறகாவது எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என மக்கள் கேட்கிறார்கள். மக்கள் எங்கள் பிரதேசத்தை முன்னேற்ற வேலை செய்யுமாறு கேட்கிறார்கள்.
போலி தேசியவாதிகள்
எங்கள் பிள்ளைகளுக்கு போதிய கல்வியை பெற்றுக் கொடுக்க வேலை செய்யுமாறு கேட்கிறார்கள். எங்கள் பிரதேசத்தில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுங்கள் என்று எங்கள் மக்கள் கேட்கிறார்கள்.
எங்கள் இளைஞன் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை தாருங்கள் என கேட்கிறார்கள். அவ்வாறு கேட்கும் போது எல்லாவற்றையும் எதிர்க்கின்ற வன்முறை ரீதியான கருத்துக்களை மாத்திரமே கூறத் தெரிந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணி எங்கள் மீதான சேறுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் இருக்கின்ற மக்களுக்கென்றாலும் சரி யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கு என்றாலும் சரி இவர்களுடைய சித்து விளையாட்டுக்கள் அனைத்தும் நன்றாக தெரியும்.
இவர்கள் போலித்தனமானவர்கள் போலி தேசியவாதிகள் என்பது மக்களுக்கு தெரியும். இவர்களின் கூலி நாடகம் என்பது வெளிநாட்டிலிருந்து வருகின்ற பணங்களால் இடம்பெறுகின்றதே தவிர தங்களுடைய அர்பணிப்பால் தங்களுடைய தியாகத்தால் அல்ல என்பது மக்களுக்கு தெரியும். நாங்கள் அவற்றை அலட்டிக் கொள்வதில்லை” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இலங்கை அரசியலும் முடிவில்லா பழிவாங்கும் விளையாட்டும்: உண்மையான திருடர்கள் யார்..! 52 நிமிடங்கள் முன்
