மாவட்ட பொது வைத்தியசாலைகள் மாகாணசபை நிர்வாகத்திடம் இருந்து பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ளன!
மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிக்கையானது இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசின் அரசியலமைப்பை மீறும் செயல் என வட மாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளருமான மருத்துவர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கீழ் மாவட்ட பொது வைத்தியசாலைகளை பொறுப்பேற்பது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தம் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையிலுள்ள ஒன்பது மாவட்ட பொது வைத்தியசாலைகள் மாகாணசபை நிர்வாகத்திடம் இருந்து மத்திய அரசாங்கத்தினால் பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது இலங்கையினுடைய அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் செயலாகும் என தெரிவித்துள்ளார்.
மாவட்டம் தோறும் ஒவ்வொரு வைத்தியசாலைகளை தெரிவுசெய்து மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதனூடாக தேசிய வைத்தியசாலைகளில் காணப்படும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் பலவருடங்களின் முன் மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட திருகோணமலை மாவட்ட பொதுவைத்தியசாலையின் தரத்தை அரசாங்கத்தினால் ஒரு தேசிய வைத்தியசாலையின் தரத்திற்கு கொண்டுவர முடிந்ததா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே பொய்யான காரணங்களை கூறி மாகாணங்களிற்கு பகிர்ந்த அதிகாரங்களை பறிப்பதே அவர்களது நோக்கமாக உள்ளது. இதன் மூலம் மாகாண வைத்தியசாலைகளை தம்வசப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் பொய்யான காரணங்களை கூறுவது உறுதிப்படுத்தப்படுகிறது.
இதனால் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபைகள் எவையுமே இல்லாத நிலையில் அரசியலமைப்பின் 13ம் திருத்தச்சட்டதினூடாக மாகாண சபைகளிற்கு பகிரப்பட்ட அதிகாரங்களை மீண்டும் பறித்தெடுப்பதென்பது முற்றிலும் சட்டவிரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
