முன்னாள் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரி கைது!
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) முன்னாள் முகாமைத்துவச் சேவை அதிகாரி ஒருவரை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மோட்டார் வாகனமொன்றை சட்டவிரோதமாகப் பதிவு செய்தல் மற்றும் உரிமை மாற்றம் செய்தல் தொடர்பான விசாரணையொன்றின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இலங்கைச் சுங்கத்துறையிடமிருந்து அனுமதி பெறாமலும், உரிய சுங்க வரிகளைச் செலுத்தாமலும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கார் ஒன்றை பதிவு செய்வதற்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுடின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் (DMT) அதிகாரி கைது
ஆணைக்குழுவின் தகவலின்படி, அந்த முன்னாள் அதிகாரி, வாகனத்தின் முதல் உரிமை மாற்றத்திற்குத் தேவையான ஒரு கவுண்டர் எண்ணை வழங்கி, அது தொடர்பான தகவல்களை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ளீடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |