வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்துக்கு உதவிகளை வழங்க வேண்டாம்! யஸ்மின் சூக்கா அவசர கடிதம்
இலங்கையின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய பணியகத்துக்கு உதவிகளை வழங்க வேண்டாம் என்று ஐ.நாவின் அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியம் மற்றும் சர்வதேச கொடையாளர்களுக்கு கடிதம் எழுதப் போவதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
போர்க்காலத்தில் இலங்கை பொலிஸ்மா அதிபராகப் பதவி வகித்த ஜயந்த விக்ரமரத்ன, காணாமல்போனோருக்கான பணியகத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்தே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் உள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளமை பாதிக்கப்பட்டுள்ளவர்களை இழிவுபடுத்துவதாக உள்ளது.
இதனால், காணாமல் போனோருக்கான பணியகத்துக்கு உதவிகளை வழங்க வேண்டாம் என்று ஐ.நாவின் அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியம் மற்றும் சர்வதேச கொடையாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ள அவர், இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் ஐ.நாவுக்கும், சர்வதேச கொடையாளர்களுக்கும் இந்த வேண்டுகோளை விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.