யாழ். விமான நிலையத்திற்கு அருகில் உள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport) விடுத்துள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால், விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதனால் விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
குறித்த அறிவுறுத்தல் தொடர்பான சுவரொட்டிகள் விமான நிலையத்தை சூழவுள்ள, காங்கேசன்துறை, மாவிட்டபுரம், வறுத்தலை விளான், பலாலி, மயிலிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

அத்துடன் இது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் அப்பகுதியில் ஒலிபெருக்கிகள் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த விமானம் தரையிறங்க முற்பட்ட வேளை பட்டத்தினால், சிரமங்களை எதிர்கொண்டதாகவும் , அதனால் பாரிய விபத்து ஏற்படவிருந்த நிலையில் தெய்வாதீனமாக விமானம் பாதுகாப்பாக தரையிறங்கப்பட்டதாக தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |