விமானத்தை கடத்த டக்ளஸ் தேவானந்தா போட்ட திட்டம் : வெலிக்கடை சிறை அனுபவம்!
1983 ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தை தொடர்ந்து கைதிகளை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்காக விமானத்தில் ஏற்றிய போது குறித்த விமானத்தைக் கடத்துவதற்கு தான் திட்டமிட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற கலவரத்தின் போது தமிழ் கைதிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட காலத்தில் அங்கிருந்த கைதிகளில் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவராவார்.
இந்தநிலையில் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 1983 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி சிறைச்சாலையிலிருந்து எங்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
யாழ்ப்பாணம் அல்லது மட்டக்களப்பிற்கு தான் எங்களை கொண்டு போவார்கள் என்று தெரியும். வெலிக்கடையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு விமானத்தில் ஏற்றிய போது விமானத்தைக் கடத்துவோம் என்ற எண்ணம் வந்தது.
விமானத்தைக் கடத்தி இந்தியாவிற்கு கொண்டு செல்வோம் என நினைத்தேன். அந்த நேரம் சக கைதிகள் இதனை விரும்பவில்லை. அதனால் அந்த திட்டத்தைக் கைவிட்டேன்.
பின்னர் விமான நிலையத்தில் இறங்கி சிறைச்சாலைக்கு கொண்டு வரும் நேரத்தில் இடையில் ஏதாவது செய்யலாம் என யோசித்தேன். எனினும் நான் தப்பினால் மற்றவர்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என நினைத்தேன்.
நாங்கள் சிலர் தப்பியோடாமல் பெருமளவானோர் தப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் சிறைச்சாலைக்குள் சென்றோம். கூட்டு முயற்சியின் பயனாக ஒன்றரை மாதங்களுக்குள் மட்டக்களப்பு சிறைச்சாலை உடைக்கப்பட்டது.” என தெரிவித்தார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....
சித்துப்பாத்தி மயானத்தில் சட்டரீதியாக சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் இல்லை : சட்டத்தரணி விளக்கம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |