ஜனாதிபதி அநுர தொடர்பில் டக்ளஸ் வெளியிட்ட அறிவிப்பு
ஜனாதிபதி அநுரவின்(anura kumara dissanake) அணுகுமுறையிலும் செயற்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்தார்.
வவுனியாவிற்கு இன்று(27) விஜயம் செய்த அவர் காத்தார்சின்னக்குளம் பகுதியில் உள்ள கட்சியின் தேர்தல் அலுவலகம் ஒன்றை திறந்துவைத்தார். அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பத்து மாவட்டங்களில் ஏன் போட்டி
தேசிய நல்லிணக்கம் ஊடாகவே எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். புதிய நாடாளுமன்றத்தில் கூடிய ஆசனங்களை பெறுவதன் மூலம் ஆட்சி அமைப்பவர்களுடன் நாங்களும் பங்குகொள்வதன் ஊடாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது அரசியல் இலக்கை அடைவதற்காக அத்திசையை நோக்கி பயணிக்கலாம் என்ற வகையில் பத்து மாவட்டங்களில் இம்முறை போட்டியிடுகின்றோம்.
அணுகு முறையிலும் செயற்பாட்டிலும் நல்லதொரு மாற்றம்
இதனூடாக நான்கு அல்லது ஐந்து ஆசனங்களை பெறுவது எமது இலக்காக உள்ளது. இதுவரை நான் எட்டு ஜனாதிபதிகளை சந்தித்துள்ளேன். ஆனால் இவர் என்னைவிட வயதில் இளைமையானவர். அவரது அணுகு முறையிலும் செயற்பாட்டிலும் நல்லதொரு மாற்றம் தெரிகிறது. எனினும் அதனைப் பொறுத்திருந்துதான் நாங்கள் பார்க்கவேண்டும்.
நாம் வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினையை பிரதானமாக முன் வைத்துள்ளோம். இந்த தேர்தலில் எமது கட்சி அதிக ஆசனங்களை பெறுவதற்கான வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆயுதபோராட்டத்தின் பின்னர் நாடாளுமன்றம் சென்றவர்கள்
சிலவேளை இந்தசந்திப்பு பலருக்கு புளியை கரைத்திருக்கலாம். நாங்கள் இருதரப்புமே ஆயுதபோராட்டத்தின் பின்னர் நாடாளுமன்றம் சென்றவர்கள். அந்தவகையில் ஒரு புரிந்துணர்வு இருதரப்பிற்கும் உள்ளது. அவர்களது ஆட்சியில் கலந்துகொள்ள போகிறோமா என்ற விடயத்தினை தேர்தலின் பின்னரே தீர்மானிக்கமுடியும்.
இதேவேளை எல்பிட்டியவில் தேசியமக்கள் சக்தி 15 ஆசனங்களும் எதிர்த்தரப்புக்கள் 15 ஆசனங்களையும் பெற்றுள்ளன. அவர்கள் நாடாளுமன்றிலும் பெரும்பான்மை எடுப்பதாக சொல்கிறார்கள். அதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஜனாதிபதி தேர்தலிலும் கணிப்புகள் எல்லாம் பிழைத்து விட்டது. எனவே பொறுத்திருப்போம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |