யாழில் தனியார் பேருந்து பிரச்சினை: டக்ளஸ் தலைமையில் தீர்வு
யாழ்ப்பாண நீண்டதுார தனியார் பேருந்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவதற்கான முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையால் எழுந்த பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்து பரீட்சார்த்த அடிப்படையில் சேவைகளை நடத்துவது என சுமுகமான தீர்வு காணப்பட்டுள்ளது.
குறித்த பிரச்சினைக்கான தீர்வை வழங்கும் வகையில் ஆளுநர் அலுவலகத்தில் இன்றையதினம்(15) கூட்டம் நடைபெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் இணைந்த பேருந்து சேவையை முன்னெடுப்பதில் இருந்துவரும் இழுபறி நிலை தொடர்பான பிரச்சினையை அடுத்தே தீர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து
முன்பதாக முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்ட தூர தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடி தீர்வு வழங்கப்படும் என வடக்கு மாகாணம் ஆளுநர் உறுதி வழங்கியிருந்தார்.
இதையடுத்து குறித்த விடயம் தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது.
விசேட குழு
இதன்போது சுமுகமான தீர்வு எட்டப்படாமையால் அன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயம் தொடர்பில் வடக்கின் ஆளுநர் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய விசேட குழு ஒன்றை நியமித்து பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பொறிமுறைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கோரியிருந்தார்.
குறித்த குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் பரீட்சார்த்தமான முறையில் அரச மற்றும் தனியார் பேருந்துகள் வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து இணைந்த சேவை பரீட்சார்த்த அடிப்படையில் நெடுந்தூர சேவைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |