மதுஷ் குழுவுடனான டக்ளஸின் தொடர்பு! சந்தேகத்தை கிளப்பும் கஜேந்திரன்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்ட பின்னணியில் மாகந்துர மதுஷின் குழுவை அவர் வழிநடத்தினாரா என்ற கேள்வி எழுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“இனவாத அரசாங்கங்களோடு கைகோர்த்து செயற்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (26.12.2025) கைது செய்யப்பட்டார்.
மாகந்துர மதுஷ்
மாகந்துர மதுஷிடம் இருந்து பெறப்பட்ட கைத்துப்பாக்கி விவகாரத்திலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் பல்வேறுபட்ட கேள்விகளை எழுப்புகிறது.

டக்ளஸின் ஆயுதம் எப்படி பாதாள உலக குழு தலைவர் மதுஷிடம் சென்றது? இதை டக்ளஸ் அவரிடம் கொடுத்தாரா அல்லது அந்த பாதாள உலக குழுவை இவர் வழிநடத்தினாரா? அல்லது அந்த குழுவுடன் ஆதரவாக செயற்பட்டாரா? என்ற கேள்விகள் எழுப்பப்படுகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட டக்லஸ் தேவானந்தா தமிழீழ தேச விரோதி என மக்கள் மத்தியில் பேசப்படுகிறார். மேலும், தமிழீழம் என்ற விடயம் சாத்தியமில்லை என கூறி ஆயுதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள்.
களவு மற்றும் கொலை
அவ்வாறு வைத்திருந்ததற்கான காரணம் களவு மற்றும் கொலைக்காக என்பதே. இது குறித்து அவரிடம் நேரடியாக கேள்வியும் எழுப்பியிருந்தேன்.
டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் சர்வதேச அமைப்புக்களிடம் காணப்படுகின்றன. ஆனால் அவ்வாறான விடயங்களுக்காக குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
இது வெரும் கண்துடைப்புக்காக இடம்பெற்ற கைதாகவே கருதமுடிகிறது. எனினும் பேதைப்பொருள் கடத்தல்காரர் மதுஷுடனான தொடர்பு அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலே, டக்ளஸ் மீதான சர்வதேச குற்றவியல் விசாரணையே நாங்கள் எதிர்பார்க்கின்ற விடயம்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |