பரபரப்பை ஏற்படுத்திய சிறிலங்காவில் முக்கிய நபரின் பதவி விலகல்
ஸ்ரீலங்காவின் கொவிட் ஒழிப்பு தொழில்நுட்பக் குழுவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம திடீரென விலகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்காவுக்கு ஏற்படப்போகின்ற ஆபத்துகளுக்குத் தன்னால் பொறுப்புகூற முடியாதென்று தெரிவித்தே அவர் குறித்த குழுவிலிருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்காவின் கொரோனா ஒழிப்பு பற்றிய தொழில்நுட்பக் குழுவிலிருந்து அண்மைய மாதங்களாக பல விசேட நிபுணர்கள் விலகிய பின்னணியில், தற்போது விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரமவும் விலகியுள்ளார்.
இதுகுறித்து அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் வினவினர். எனினும் கொவிட் ஒழிப்பு தொழில்நுட்பக் குழுவில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
கொவிட் ஒழிப்பு சார்ந்த தொழில்நுட்ப நிபுணர்களின் குழுவிலிருந்து மருத்துவர் ஆனந்த விஜேவிக்கிரம விலகியமை குறித்து அவரிடமே கேட்கவேண்டும். அந்தக் குழுவில் பிரச்சினைகள் இருந்ததாக எமக்கு அறியக்கிடைக்கவில்லை. எனினும் அவர் உட்பட அனைத்து மருத்துவர்களும், சுகாதாரத்துறையிலுள்ளவர்களும் கொவிட் ஒழிப்பு முயற்சிகளுக்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கிவருகின்றார்கள். இராணுவத்தினரும் பங்களித்து வருகின்றனர். சுகாதாரத்துறையினரது ஆலோசனைப்படியே நாட்டை தற்போது முடக்கியிருக்கின்றோம்.
அரசாங்கம் என்றவகையில் சுகாதாரத்துறையினரது ஆலோசனை, பரிந்துரைகளுக்கமையவே அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். நாட்டில் தற்போது கொவிட் தடுப்பூசியளிக்கின்ற பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதோடு தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைகின்றதோடு மரணவீதமும் அடுத்துவரும் வாரங்களில் குறையும் என நம்புகின்றோம்.
கொவிட் தொற்றுக்கு எதிரான இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 9.5 மில்லியனாக அதிகரித்துள்ளதோடு 30 வயதுக்கு அதிகமானவர்கள் மற்றும் அனைவருக்கும் தடுப்பூசியளிக்கின்ற பணி இரண்டு வாரங்களில் முழுமையாகவுள்ளதோடு தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் பாரிய அளவில் குறையும் என்றும் நம்புகின்றோம்.