“சினோபோர்ம் தடுப்பூசி” உத்தரவாதம் இல்லை! எச்சரிக்கும் முன்னாள் சுகாதார அமைச்சர்
சீனாவின் தயாரிப்பான கொவிட்- 19 வைரஸுக்கு எதிரான சினோபோர்ம் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு மருத்துவ உத்தரவாதம் இல்லை என முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசியின் பயன்பாடு மிகவும் ஆபத்தானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையகம், சினோபோர்ம் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை . மேலும் சீன உற்பத்தியாளர், தடுப்பூசி குறித்த எந்த தகவலையும் வழங்கவில்லை.
இந்நிலையில் இந்த தடுப்பூசிக்கு அரசியல் ஒப்புதல் மாத்திரம் இருக்கின்றது.
இதேவேளை சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட நிபுணர் குழுவுக்கு பதிலாக அமைச்சர் சன்ன ஜெயசுமனவுக்கு விசுவாசமானவர்கள் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.