எம்பிக்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல் : சட்டமா அதிபருக்கு பறந்த சட்டமூல வரைவு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூல வரைவு சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு (Ministry of Justice) தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்ததன் பின்னர், இந்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தை தாமதமின்றி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இதேவேளை, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பத்து முக்கிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவு தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே (Pemasiri Manage) தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேவையான தகவல்களை சேகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வது சட்டவிரோதமானது என்று கூறிய சித்ரசிறி குழுவின் அறிக்கையை ஜனாதிபதி செயலகத்திலிருந்து பெறுவதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மூன்று விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், ஆனால் இது தொடர்பாக இன்னமும் தகவல்கள் கிடைக்காமை வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) அண்மையில் தெரிவித்தார்.
மாதாந்த ஓய்வூதியம் பெறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 330 ஆகும். இது தவிர, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமார் 182 பேரும் ஓய்வூதியம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்துக்காக அரசாங்கம் மாதந்தோறும் 23.5 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாக செலவிடுவதாக தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தகக்து.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
