சட்டவிரோத வாகன இறக்குமதியாளர்களுக்கு பிரதியமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
வரி செலுத்தாமல் பொருட்களை இறக்குமதி செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) தெரிவித்துள்ளார்.
அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (16) நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்திற்கு வாகன மற்றும் இலத்திரனியல் உபகரண இறக்குமதியாளர்கள் தங்கள் முழு ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
பாதீட்டுத் திட்டத்திற்கு
மேலும் தற்போதைய அரசாங்கம் வாகன இறக்குமதி தொடர்பில் மேற்கொண்டுள்ள தீர்மானம் காரணமாக வாகன இறக்குமதித் துறை விரிவடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், எதிர்வரும் பாதீட்டுத் திட்டத்திற்காகப் பயனுள்ள பல பரிந்துரைகளையும் அவர்கள் இதன்போது முன்வைத்ததுடன், இலத்திரனியல் உபகரணம் தொடர்பான உற்பத்திகளை இறக்குமதி செய்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
ஒழுங்கமைக்கப்பட்ட சில குழுக்கள் வரி செலுத்தாமல் இலத்திரனியல் உபகரணங்களை நாட்டிற்குள் கொண்டுவருவதால் சந்தையில் ஏற்றத்தாழ்வு மற்றும் பொருட்களின் தரம் தொடர்பான குறைபாடு ஏற்பட்டுள்ளதாக இலத்திரனியல் உபகரண இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இவ்வாறான செயற்பாடுகளால் அரசுக்கு அதிக வரி வருமான இழப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
புதிய சட்டங்கள்
இந்தநிலையில் இது குறித்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இலத்திரனியல் உபகரண இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய குறித்த துறையிலுள்ள நிபுணர்கள் வழங்கிய அனைத்து பயனுள்ள பரிந்துரைகளும் 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம் தயாரிக்கப்படும் போது கருத்தில் கொள்ளப்படும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் தரமான பொருட்களை இறக்குமதி செய்ய தேவைப்பட்டால் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
