அரச பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் திட்டத்திற்கு பல பில்லியன் நிதி ஒதுக்கீடு
அரச பாடசாலைகளில் போஷாக்குணவு வழங்கும் திட்டம் 100 கல்வி வலயங்களை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் குறித்த திட்டத்திற்காக 32 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில், 8,943 பாடசாலைகளில் கல்விகற்கும் 1.4 மில்லியன் மாணவர்கள் இந்த திட்டத்தின் ஊடாக பயனடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான தலைமுறையை உருவாக்கும் நோக்கத்தில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆண்டுதோறும் பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
1 முதல் 5 வரையான வகுப்புகள்
2006 ஆம் ஆண்டு முதல் தேசிய திட்டமாக இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில் 100 இற்கும் குறைந்தளவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் உள்ள அனைத்து மாணவர்களும் இந்த உணவைப் பெறுவதற்கு தகுதியுடையவர்களாகக் கருதப்படுகின்றனர்.
இருப்பினும், திட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து ஒரு பாடசாலை அனுமதிக்கப்பட்டிருக்குமானால், மாணவர்களின் எண்ணிக்கை 100இற்கும் அதிகமாக இருந்தாலும் அனைத்து மாணவர்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது.
அத்துடன், அனைத்து பாடசாலைகளிலும் 1 முதல் 5 வரையான ஆரம்ப வகுப்புகளிலுள்ள அனைத்து மாணவர்களும் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்களாக கருதப்படுகின்றனர்.
பயனடைவதற்கு தகுதி
விசேட கல்வி பிரிவுகள் அல்லது விசேட கல்வி நிலையைக் கொண்ட பாடசாலைகளிலுள்ள அனைத்து மாணவர்களும் இந்த உணவுத் திட்டத்திலிருந்து பயனடைவதற்கு தகுதியுடையவர்களாக கருதப்படுகின்றனர்.
அத்துடன் தரம் 6 முதல் 13 வரையிலான மாணவர்களும் அவர்களின் ஊட்டச்சத்து நிலை மற்றும் தேவைகளின் அடிப்படையில் இந்த உணவுத் திட்டத்தில் உள்வாங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
