மட்டக்குளி பகுதியை உலுக்கிய விபத்து...! கார் சாரதிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சாரதியை செப்டம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர் இன்று (17-09-2026) கொழும்பு அல்ஃபிட்ஸ்டார்ப் (அளுத்கடை) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தீவிர சிகிச்சை
இந்தநிலையில் விபத்து நடந்த சமயத்தில் கார் சாரதி கஞ்சா போதையில் காரைச் செலுத்தியுள்ளது காவல்துறை மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவளிவில் (16-09-2026) வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த 13 நபர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்தனர்.
மேலதிக விசாரணை
இறந்தவர்கள் கிராண்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் மட்டக்குளி பகுதிகளைச் சேர்ந்த 44 மற்றும் 64 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய 52 வயதான மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
மட்டக்குளி காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |