தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!
புதிய இணைப்பு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், பேருந்துகளுக்கான வழித்தட அனுமதிப்பத்திரங்களைச் சட்டவிரோதமாக வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் விதிகளுக்கும், 2014.09.19 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கும் முரணாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்காக 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை சட்டபூர்வ நடைமுறைகளுக்கு அப்பால், வருடாந்தக் கட்டணங்களை ஒரே தடவையில் அறவிடாமல் வழங்கியமையே முன்னாள் தலைவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.

இதற்கமைய, சந்தேகநபர் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |