புத்தளம் காவல் நிலையத்திற்கு முன்னால் இரவுவேளை ஒன்று கூடிய மக்களால் பெரும் பரபரப்பு!
புத்தளம் காவல் நிலையத்திற்கு முன்னால் மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வியாபாரம் புத்தளத்தில் அதிகரித்தமையால் போதைப்பொருள் வியாபாரியின் வீட்டின் முன்னால் மக்கள் கூடியமையால் பெரும் பரபரபப்பு ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புத்தளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட முள்ளிபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக போதைப் பொருள் வியாபாரம் அதிகரித்து வருவதினால் அப்பகுதி மக்கள் நேற்று இரவு போதைப் பொருள் வியாபாரம் செய்கின்றவரின் வீட்டிற்குச் சென்று போதைப்பொருள் வியாபாரத்தை நிறுத்துமாறு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே அப்பகுதி மக்கள் தனது வீட்டிற்கு பலவந்தமாக வந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளைத் தாக்கியதினால் மனைவி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் வியாபாரி புத்தளம் காவல் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதி மக்களும் புத்தளம் காவல் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்கு சென்றவேளை காவல்துறையினர் இருவரை மாத்திரம் முறைப்பாடு செய்யுமாறு கூறி இருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
எனினும் காவல் நிலையத்திற்கு வெளியில் நின்ற மக்கள் அனைவரையும் முறைப்பாடு செய்ய அனுமதிக்க வேண்டுமென கூறி மக்கள் காவல்துறையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரத்திற்கு அமைதியின்மை ஏற்பட்டது.