போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது : திரைப்பட பாணியில் காவல்துறை அதிரடி
அம்பாறை மாவட்டத்தில் கார் ஒன்றில் போதைப்பொருட்களை கடத்திச் சென்ற மூன்று பேரை துரத்திச் சென்று கைது செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சாய்ந்தமருது காவல் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இச்சம்பவம் நேற்று (4) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறை பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய அதிகாலை 3 மணியளவில் கல்முனை தலைமையக காவல் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்வதற்காக சென்றிருந்தனர்.
திரைப்பட பாணியில் கைது
இதன் போது குறித்த வீட்டின் அருகில் இருந்து கார் ஒன்றில் இருவர் தப்பிச் சென்ற நிலையில் அவர்களை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் துரத்திச் சென்றனர்.

இவ்வாறு துரத்திச் சென்ற போது மற்றொரு சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் ஒன்றின் உதவியுடன் தப்பி சென்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார்.
இதனை அவதானித்த குற்றப் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரை கைது செய்ததுடன் தப்பிச் சென்ற காரை சாய்ந்தமருது காவல் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக திரைப்பட பாணியில் தடுத்து நிறுத்தி காரில் இருந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
சாய்ந்தமருது காவல் நிலையம்
கைது செய்யப்பட்டவர்கள் 32, 33, 34 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும், சந்தேகநபர்களிடம் இருந்து 15 கிராம் 370 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், சொகுசு கார், மோட்டார் சைக்கிள், இரு கைத்தொலைபேசிகள், ஒரு தொகை பணம், வங்கி அட்டைகள் என்பன மீட்கப்பட்டன.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சட்டநடவடிக்கைக்காக சாய்ந்தமருது காவல் நிலையத்தில் சான்றுப்பொருட்களுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கைது நடவடிக்கைக்கு அந்த ஊர் மக்கள் இரவு முழுவதும் பட்டாசு கொளுத்தி தமது ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |