இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பொருள் - இரகசிய தகவலால் சிக்கியது
தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த கிறிஸ்டல் பெத்தலின் என்ற போதைப் பொருள் ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இதில் சம்பந்தப்பட்ட இருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாது,
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஒரு விசைப்படகில் கிரிஸ்டல் பெத்தலின் என்ற போதைப் பொருள் கடத்தப்பட உள்ளதாக இராமேஸ்வரம் குற்றத் தடுப்பு பிரிவு காவ்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டவேளை இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பாம்பன் புயல் காப்பகம் பகுதியைச் சேர்ந்த தஸ்மன் (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் தங்கச்சிமடம் பொட்டேல் நகரைச் சேர்ந்த பிரைட்வின் இதை கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
பின்பு இருவரையும் நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த ஒன்றரை கிலோ எடை கொண்ட கிரிஸ்டல் பெத்தலின் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு கோடி மதிப்பிலான போதைப் பொருள் இது என்பது தெரியவந்தது.
இதையடுத்து இராமேஸ்வரம் நகர் காவல்துறையினர் இரண்டு பேரையும் கைது செய்து இதில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை தீவிரமாக வலைவீசி தேடி வருவதோடு பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை தடவியல் துறைக்கு அனுப்பி உள்ளனர்.
மேலும் ராமேஸ்வரம் தீவு பகுதியில் இந்திய கடலோர காவல்படை, கியூ பிராஞ், மரைன் காவல்துறையினர் மற்றும் குற்றத் தடுப்பு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் சர்வ சாதாரணமாக இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
