முல்லைத்தீவில் தலைக்கவசத்தால் இளைஞர்களினால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்கள்
முல்லைத்தீவில் (Mullaitivu) சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர்கள் சிலர் பெண்களை தாக்கிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு காவல் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் கடந்த இரண்டாம் திகதி சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்தநிலையில் நேற்று (05) குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளார்.
மகளிர் சுயசேமிப்பு
அத்தோடு, உடனடியாக புதுக்குடியிருப்பு காவல் நிலையம் சென்று குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய அந்த இளைஞர் குழுவை உடனடியாக கைது செய்யுமாறும் புதுக்குடியிருப்பு காவல்துறை பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு காவல் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர் குழுவால் தொடர்ந்தும் அப்பகுதி மக்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த இரண்டாம் திகதி அன்று மாலை வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் சுயசேமிப்பு கொத்தணி குழு ஒன்றினுடைய கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத செயற்பாடு
இதன்போது அவ்வீட்டின் அருகே செல்லும் வீதியால் வருகை தந்த, அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் குறித்த இளைஞர்குழு, கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பெண்களை தகாத வார்த்தையால் திட்டியதுடன், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பெண்கள் சிலரை கடுமையாகத் தாக்கியுமுள்ளனர்.
அதிலும் குறிப்பாக தலைக்கவசத்தினால் ஒரு பெண்ணின் தலைப்பகுதி மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்திய தலைக்கவசமும் இதன்போது காண்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்களால் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கமைய, தாக்குதலுடன் தொடர்புடைய நால்வரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், தாக்குதலுடன் தொடர்புடைய ஏனைய மூவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அச்சுறுத்தல் நிலைமை
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரியவந்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஏனைய மூவரையும் கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக புதுக்குடியிருப்பு நிலைய பொறுப்பதிகாரி துரைராசா ரவிகரனிடம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாட்டாளர்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல் நிலைமைகளைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாகவும் காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினருடன் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முப்புரம் வட்டார வேட்பாளர் சிவபாதம் குகநேசன் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
You May Like This
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





