உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விவகாரம் - சிக்குவாரா மைத்திரி?
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடிப்படையாகக் கொண்டு சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு (Maithripala Sirisena)எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சட்டத்தரணி பைசர் முஸ்தபா (Faiszer Musthapha) நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்தும், உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையை அடிப்படையாகக் கொண்டு மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையின்போது அவர் இந்த விடயத்தை முன்வைத்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் 900 மில்லியன் ரூபா நட்ட ஈட்டைக் கோரி, 107 பேர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த வழக்குகளை நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு அழைத்து, மைத்திரிபால சிறிசேன சார்பில் மன்றில் வாதங்களை முன்வைக்கும் போதே ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையை மையப்படுத்தி, குறித்த ஆறு பேருக்கு எதிராக, பாதிக்கப்பட்ட 289 பேர் இரு மாவட்ட நீதிமன்றங்களில் நட்ட ஈடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர்.
கொழும்பு மற்றும் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவை ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ள நட்ட ஈட்டின் மொத்த பெறுமதி 1,250 மில்லியன் ரூபாயாகும். நீர்கொழும்பு - கட்டுவபிட்டிய தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 182 பேர் நீர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நட்ட ஈடு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 107 பேர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த அனைத்து நட்ட ஈடு கோரும் வழக்குகளிலும் பிரதிவாதிகளாக, முன்னள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட காவல்துறைமா அதிபருமான நிலந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகள்க பெயரிடப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் பிரதிவாதி தரப்பு நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் அரச தலைவரான மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மன்றில் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.