ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்ட 24 தீவிரவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்ட 24 தீவிரவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.
காவல்துறை தனது கடமையை சரியாக நிறைவேற்றியுள்ளதாகவும், நீதித் துறையே இனி கடமையைச் செய்ய வேண்டுமெனவும் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“காவல்துறையால் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ளன. தற்போது இதுதொடர்பிலான விசாரணை விடயங்கள் அனைத்தும் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஐந்து உயர் நீதிமன்றங்களில் 9 வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தை உருவாக்கிய 24 மிகவும் பயங்கரமான தீவிரவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள மூன்று நீதியரசர்கள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தின் விசாரணைகள் நாளாந்தம் இடம்பெறவுள்ளன.
விசாரணைகளை மூடி மறைப்பதாக காவல்துறைக்கோ, அரசாங்கத்திற்கோ குற்றஞ்சாட்ட முடியாது. குறுகிய காலத்திற்குள் இந்த விடயம் செய்து முடிக்கப்பட்டுள்ளது” என்றார்.