உதய கம்மன்பில மீது பழியை போட்டுவிட்டு அநுர தப்பிக்க முடியாது: சுகாஷ் காட்டம்!
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் உதய கம்மன்பில மீது, பழியை போட்டுவிட்டு அநுர குமார (Anura Kumara Dissanayake) தப்பி விடுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற வேட்பாளருமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
அராலியில் இன்றையதினம் (22.10.2024) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ''இணைந்திருந்த வடக்கு - கிழக்கினை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு பிரித்தவர்கள் ஜேவிபியும் அநுரவும் தான்.
அநுர குமார திசாநாயக்க
சந்திரிகாவினுடைய (Chandrika Kumaratunga ) ஆட்சி காலத்தில் அநுர குமார விவசாய அமைச்சராக இருந்தபோதுதான் செம்மணியில் 600 இளைஞர்கள் கொண்டு புதைக்கப்பட்டார்கள்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அநுர குமாரவின் கட்சியும், அநுரகுமாரவும்தான் கொழும்பிலே சிங்கள மக்களை திரட்டி, முள்ளிவாய்க்காலில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் தலைவர் பிரபாகரன் தப்பி விடுவார் என மகிந்தவிக்கு அழுத்தம் கொடுத்து கொத்துக்கொத்தாக தமிழ் மக்களை கொன்று குவித்தமைக்கு காரணமானவர்கள் இந்த ஜேவிபி தான்.
இப்போது உதய கம்மன்பில (Udaya Gammanpila) மீது, அநுர குமார பழியை போட்டுவிட்டு தான் தப்பி விடுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஈஸ்டர் தாக்குதல்தாரிகளை தனக்குத் தெரியும் என்று அநுர ஜனாதிபதி ஆவதற்கு முன்பு சொல்லி இருந்ததார். அப்படி என்றால் ஏன் அவர்களை இதுவரை கைது செய்யவில்லை.
ஈஸ்டர் தாக்குதல்
ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகள் ராஜபக்ச குடும்பம் என்றால், மத்திய வங்கியின் ஊழல் குற்றவாளிகள் ரணில் விக்ரமசிங்கமும் அவருடைய தரப்பினரும்.
ஆகவே அநுர குமார திசாநாயக்க சிங்கள மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமாக இருந்தால் ராஜபக்ச குடும்பத்தினரையும், ரணில் விக்ரமசிங்க தரப்பினரையும் சிறைக்குள் போடட்டும்.
தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினை வழங்கிவிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், இனப் பிரச்சனைக்கும் ஒரு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணையை நடத்தட்டும். அதற்குப் பின்னர் நாங்கள் அநுர குமாரவை நம்புவதை பற்றி யோசிப்போம்'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல்கள்: கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |