உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையை நிராகரித்தது கத்தோலிக்க திருச்சபை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல் 4 காணொளி வெளியிட்ட அறிக்கையை மறுத்து பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் அருட் தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோ நேற்று (09) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அறிக்கையில் முரண்பாடு
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அதிபர் ஆணைக்குழுவிற்கும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையை ஏற்றுக் கொள்வதா அல்லது அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்வதா என்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தண்டனை விதிக்க கேட்கவில்லை
"சந்தேக நபர்களுக்கு வெள்ளையடிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் திருத்தும் முயற்சியே இது. சுரேஷ் சாலேவை தூக்கிலிடச் சொல்லவில்லை. முன்னாள் அதிபர் கோட்டாபயவிற்கு தண்டனை விதிக்கக் கேட்கவில்லை. அவர்களை குற்றவாளிகள் என்று அறிவிக்குமாறு கோரவில்லை.
இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே கேட்டுக்கொள்கிறோம். . வெளிப்படையான அறிக்கையை சமர்ப்பிக்கவும். அப்போது நீங்கள் சொல்வதை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்." எனத் தெரிவித்தார்.