உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி அபூஹிந் : யார் அவர்..!
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை முழுமையாக எங்கள் யாருக்கும் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் செப்டெம்பர் 11 அமெரிக்க பெண்டகன் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை பூரணமாக எங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும். அரசாங்கம் ஏன் மக்களுக்கு இதனை மறைக்க வேண்டும்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (22) இரண்டாவது நாளாக இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பூரண விசாரணை
இவ்விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் வெளிப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் உண்மை என்ற தீர்மானத்துக்கு நாங்கள் வரவில்லை.
ஆனால் இந்த விடயங்களின் உண்மை தன்மை தொடர்பாக பூரண விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
விசாரணையை தாமதப்படுத்தும் அனைவரது கரங்களிலும் இதன் இரத்தம் படிந்திருக்கிறது. தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அபூஹிந். ஆனால் அவர் யார் என கண்டறியப்பட வேண்டும்.
சூத்திரதாரிகள்
அத்துடன் இந்த தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க எமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்போம் என்ற உறுதிமொழியை தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு வழங்குகிறேன் இந்த தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்துவதில் எமக்கு இணங்க முடியாது.
அவ்வாறு தெரிவுக்குழு அமைப்பதாக இருந்தால் அதன் எண்ணிக்கை ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களில் சமமாக இருக்க வேண்டும்.
பெண்டகன் விசாரணை குழுவில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமமாக நியமிக்கப்பட்டதனாலே அவர்களுக்கு உண்மையை தெரிந்துகொள்ள முடியுமாகியது.
அத்துடன் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் சஹ்ரானை புலனாய்வு அதிகாரிகள் நாடு பூராகவும் தேடிக்கொண்டிருந்தனர். ஆனால் ஐ.பி. முகவரியில் சஹ்ரானுடன் அதிகமாக தொலைபேசியில் உரையாடி இருப்பது புலனாய்வு அதிகாரி ஒருவர் என அமெரிக்காவின் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தின் உண்மை என்ன என்பதை அரசாங்கம் விசாரணை மேற்கொள்ளவேண்டும்.
அதேபோன்று மாத்தளை பொடி சஹ்ரான் சொனிக் சொனிக்குடன் தொலைபேசியில் உரையாடி இருப்பது வெளிப்பட்டபோது அந்த சிம்காட் புலனாய்வு ஒருவரிடம் இருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த புலனாய்வு அதிகாரி, இந்த தாக்குதலை ஐ.எஸ். ஏன் இன்னும் பொறுப்பேற்காமல் இருக்கிறது? விரைவாக பொறுப்பேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோன்று குண்டுதாரி ஜெமீல் குண்டை வெடிக்கவைக்க முன்னர் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் 2 பேர் ஜெமீலின் வீட்டுக்கு சென்றுள்ளர்.
இது எவ்வாறு முடியும். அதேபோன்று குற்றப்புலனாய்வு அதிகாரிகள் உரையாடிய தொலைபேசி இலக்கத்தை தேடிப்பார்க்கும்போது அது பிழையான முகவரியில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அந்த சிம்காட்டை பயன்படுத்திக்கொண்டே லசந்த விக்கிரமதுங்கவை கொலைசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறது.
கீத் நொயர், பிரகீத் எக்னெலிகொட, உபாலி தென்னகோன் ஆகியோரை கடத்துவதற்கு பயன்படுத்தி இருப்பதும் இந்த சிம்காட்டை பயன்படுத்தியாகும் என்பது விசாரணைகளில் வெளிவந்திருக்கிறது.
அதனால் குண்டுதாரி ஜெமீலை புலனாய்வு அதிகாரிகள் எவ்வாறு தெரிந்துகொண்டிருந்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். மேலும், சஹ்ரானுக்கு மேலால் ஒருவர் இருந்தார்.
யார் அந்த அபூஹிந்
அவரின் கட்டளைக்கமையவே அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது. அவர்தான் அபூஹிந்.
அபூஹிந் என்பது அவரின் புனைப்பெயர். அதனால் இந்த தாக்குதலின் சூத்திரதாரி அபூஹிந். அவர் யார் என்பதை விசாரணை நடத்தவேண்டும்.
அதேபோன்று சாரா ஜெஸ்மின் தொடர்பாக டீ.என்.ஏ. பரிசோதனை 3 நடத்தியுள்ளது. முதலாவது இரண்டிலும் சாரா உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது 3ஆவதில் அவர் மரணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் சாய்ந்தமருதில் குண்டு வெடித்த வீட்டில் குண்டு வெடித்த பின்னர் சாராவின் குரல் ஓசை கேட்டதாக சஹ்ரானின் மனைவி தெரிவித்திருக்கிறார். அதனால் இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளவேண்டும்.
மேலும், கோட்டாபய ராஜபக்ச அதிபராக நியமிக்கப்பட்டு, அமைச்சரவை மற்றும் பிரதமரை நியமிக்க முன்னர் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மேற்கொண்டுவந்த புலனாய்வு அதிகாரிகள் சானி அபேசேகர உட்பட 31 பேரை மாற்றினார்.
ஏன் அவர் அவ்வாறு செய்தார். இதன் உண்மையை நாங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அத்துடன், பேராயர் கர்த்தினால் இந்த தாக்குதலை அறிந்திருந்ததாகவும் அவருக்கு இது தொடர்பாக புலனாய்வு பிரிவு அறிவித்திருந்ததாகவும் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் இந்த சபையில் தெரிவித்திருந்தார்.
ஆனால் தாக்குதலுக்கு பின்னரே பேராயர் கர்த்தினாலுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. பேராயர் கர்த்தினாலுக்கு புலனாய்வு பிரிவு வழங்கிய தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த கடிதத்தை சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நான் உட்பட அனைவரும் பொறுப்புக்கூறவேண்டும். அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூறவேண்டும்.
அதனால் எமது அரசாங்கத்தில் தாக்குதலின் உண்மை சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்போம். இந்த உறுதிமொழியை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறேன்.” என்றார்.