கோட்டாபயவின் பேரில் அரங்கேறிய இன்னொரு கொடூரம்: சனல் 4 இல் அம்பலமாகும் அடுத்த தகவல் (காணொளி)
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் கோட்டாபய ராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டுவரும் நோக்குடன் நடத்தப்பட்டவை என சனல் 4 ஊடகம் வெளியிட்டுள்ள ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்கவும் கோட்டாபய ராஜபக்சவின் பேரிலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.
சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் ஊடக செயலாளரான அசாத் மௌலானா, இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் - இலக்குகளுக்குரிய அனுப்புதல்கள் என்ற பெயரில் வெளியான ஆவணப் பதிவில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அரங்கேற்றப்பட்ட கொடூரங்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களை மையப்படுத்தி சனல் 4 ஊடகம் வெளியிட்டுள்ள ஆவணப் பதிவில் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலத்தில் கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் அரங்கேற்றப்பட்ட கொடூரங்கள் தொடர்பான விடயங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற ஊழல் மற்றும் ஊடகங்களுக்கு எதிரான அடங்குமுறைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அறிக்கையிட்டு வந்த சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, தாம் கொலை செய்யப்பட்டலாம் என கணித்திருந்ததுடன், அவ்வாறு கொலை செய்யப்பட்டால் அதன் பின்னணியில் அரசாங்கமே இருக்கும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் லசந்தவை கொலை செய்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பிள்ளையானை அழைத்தார் என கன்சீர் அசாத் மௌலானா சனல் 4 ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார்.
தாமும் பிள்ளையானும் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த போது, Tripoli Platoon என்ற ஆட்கொலை செய்யும் துணைப் படையொன்றை உருவாக்குவதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாம் கோட்டாபய ராஜபக்சவை அவரின் அறையில் சந்தித்தோம்.அவரின் முன்னால் சண்டே லீடர் பத்திரிகை இருந்தது. இந்த நாய் எப்போதும் என்னுடன் விளையாடுகின்றது. லசந்த கட்டாயம் கொலை செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார் முடிந்தால் அதனை விரைவாக செய்யுங்கள்” என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை நாட்டின் அதிபராக கடந்த 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்ட பின்னர், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்துவந்த மூத்த காவல்துறை அதிகாரியான நிஷாந்த டி சில்வா, ஐரோப்பிய புலனாய்வு பிரிவிற்கும் ஹேக்கிலுள்ள தீர்ப்பாயத்திற்கும் சாட்சியம் வழங்கியுள்ளதாக சனல் 4 ஆவணப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள்
தமக்கும் தனது குடும்பத்தினருக்கும் சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவு, கடற்படை புலனாய்வு பிரிவு, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டதாகவும் நிஷாந்த டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புபட்ட Tripoli Platoon குழுவை சேர்ந்த ஐவரின் தொலைபேசி இலக்கங்களை தாம் கண்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழுவை கோட்டாபய ராஜபக்ச நேரடியாக கண்காணித்து வந்திருந்ததாகவும் ஆகவே அவரை தாம் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைத்ததாகவும் சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை அதிகாரியான நிஷாந்த டி சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
லசந்த விக்ரமசிங்கவின் கொலை தொடர்பாக ஏன் தம்மை சந்தேகநபராக பெயரிட்டீர்கள் என கோட்டாப ராஜபக்ச தம்மை வினவியதாகவும் எனினும் தாம் தேவையற்ற விடயங்களை செய்ய மாட்டேன் எனவும் தேவையான விடயங்களையே செய்கின்றேன் எனவும் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.