ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள சதித்திட்டம்: அம்பலப்படுத்திய ரீஐடி தலைவர்
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் சதித்திட்டங்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டவை என சிறிலங்கா பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைவர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரசன்ன அல்விஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, பிரசன்ன அல்விஸ் இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.
போலியான விடயங்கள்
இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவி சாரா ஜஸ்மீன் மற்றும் வேறு சில தரப்பினர் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் போலியானவை என இதன் போது பிரசன்ன அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் முன்னாள் ஊடக செயலாளர் அசாத் மௌலானா தொடர்பில் சனல்-4 வெளியிட்ட ஆவணப்பதிவு குறித்து பிரசன்ன அல்விஸ் எதுவும் குறிப்பிடப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களால் இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு காவல்துறை அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் நிலந்த ஜயவர்தன மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இந்த கலந்துரைாயடலில் பங்கேற்பதாக தெரிவித்திருந்தாலும், அவர்கள் பங்கேற்கவில்லை என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.