உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு நாளை
நாடே உற்றுநோக்கி உள்ள உயிர்த்த ஞாயிறு தின கோர தாக்குதல் வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்குச் சதித்திட்டம் தீட்டியமை, உதவி ஒத்தாசை புரிந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற வழக்கின் தீர்ப்பு நாளை (22) அறிவிக்கப்படவுள்ளது.
மேல்நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.
விசாரணைகள்
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்தனர்.

அத்துடன் தினமும் இடம்பெற்ற சாட்சி விசாரணைகளின் பின்னர் முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சாட்சி விசாரணைகள் கடந்த ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி நிறைவடைந்தது.
வழக்கு தொடர்பான நீண்ட சாட்சி விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கொழும்பு மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்ப்புக்கான திகதியைக் குறித்தொதுக்கி, செப்டெம்பர் 22 ஆம் திகதி அதற்குரிய தீர்ப்பு பிரகடனப்படுத்தப்படும் என அறிவித்திருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |