சடுதியாக அதிகரிக்கும் 'தொற்றா நோய்கள்' தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழகம் அதீத கரிசனை
அண்மையை புள்ளி விபரங்களின் படி பிரதேசத்தில் புற்று நோய் மற்றும் சக்கரை வியாதி போன்ற தொற்றா நோய்கள் இளவயதினர் மத்தியில் அதிகரித்து வருகிறது.
எனவே இதில் வைத்திய நிபுணர்களும், பல்கலைக்கழக வைத்திய பீட கல்வியியலாளர்களும் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்பது வெளிப்படை.
இதனடிப்படையில், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிரிவுகளில் ஒன்றான “சமூகம் மற்றும் தொழில் துறைகளை பல்கலைக்கழத்துடன் இணைக்கும் நிலையம்” தனது முதலாவது நிகழ்வை துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழக சுகாதார பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் கடந்த முதலாம் திகதி நிகழ்த்தியது.
பல்கலைக்கழகம் ஒரு சமூக நிறுவனம் என்பதால் சமூகம் தொடர்பான விடயங்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு, கிழக்கு பிரதேச மக்களின் நல்வாழ்வை மேன்மையடையச் செய்வதில் சுகாதாரத்துறையினரின் முன்னெடுப்புகளுடன் பல்கலைக்கழகம் எப்போதும் இணைந்து செயற்பட உள்ளதாக துணைவேந்தர் தனதுரையில் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவர்கள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சுகுணன் உள்ளிட்ட பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், பல்கலைக்கழக சுகாதார பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி உட்பட பேரவை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் க. அருளானந்தம் நிகழ்வை வழிப்படுத்தி நிலையத்தின் செயற்பாடுகள் பற்றி விளக்கமளித்தார்.
தொடர்ந்து நிகழ்வில் இடம்பெற்ற கருத்தாடலில், சுகாதார பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி வைத்தியர் அஞ்சலா அன்ரனி அருட்பிரகாசம் தனது அனுபவப் பதிவின் கருத்துப் பகிர்வினை ஆரம்பித்து வைக்க, தொடர்ந்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் துறைசார் நிபுணர்களால் முன்வைக்கப்பட்டது.
புற்றுநோயின் கையேறு நிலை பற்றிய ஒரு அவசர நடவடிக்கை சமூகங்களுக்கிடையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதும் இக்கால கட்டத்துக்கு ஏற்ப போஷாக்கான உணவுப் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்பதும் கருத்துக்களாக அமைந்தன.
தொடர்ந்து பிரதேச வைத்திய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், சமூகம் சார் நோய்த்தடுப்பு மற்றும் குணப்படுத்தல் பற்றிய தெளிவொன்றை அனைவரும் பெற்றிருக்க வேண்டும் என்பதையும், நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறியும் ஒரு விழிப்புணர்வு இந்த நிலையத்தின் மூலம் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிரதேச மக்களின் ஆரோக்கியமான வாழ்வை மையப்படுத்தி இடம்பெற்ற இந்த நிகழ்வில் அதிகமான மருத்துவர்கள் பங்கேற்று சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.



