தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்
அமைதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் செயற்படும் அரசியல் கட்சியை காவல்துறை தடுக்கவோ அல்லது கட்சியின் செயற்பாட்டாளர்களை கைது செய்யவோ முடியாது என தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
அரசியல் கட்சிகள் ஜனநாயக ரீதியில் அமைதியாக முன்னெடுப்பதற்கான அதிகாரம் அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனை தடுக்கும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லையெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு , காவல்துறைமா அதிபருக்கு அறிவித்துள்ளது.
முன்னிலை சோசலிச கட்சியின் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதாகவும், கட்சியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு காவல்துறை அடிக்கடி இடையூறு விளைவிப்பதாகவும் அண்மையில் கட்சியினரால் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு காவல்துறைமா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.
ஒரு அரசியல் கட்சி, அரசியல் நடவடிக்கைகளை அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் நடத்த அரசியலமைப்பு அனுமதிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம் அந்த கடித்தில் ஒரு அரசியல் கட்சியால் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு எந்த தடை உத்தரவும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிச கட்சி முறைப்பாட்டில் தெரிவித்துள்ள விடயங்கள் உண்மையெனின் அந்த விடயங்கள் ஜனநாயகத்திற்கு தீவிரமான விடயமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு அதனை நோக்குவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு காவல்துறைக்கோ அல்லது வேறு அரச அதிகாரிகளுக்கோ உரிமையோ அல்லது இயலுமையோ கிடையாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பலவந்தமாகவோ, அச்சுறுத்தியோ அல்லது சட்டத்தை மீறியோ எவரையும் கைது செய்ய முடியாது என்பதை காவல்துறைமா அதிபர் நன்கு அறிவார் எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே இந்த விடயம் குறித்து துரிதமாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, இவ்வாறான விடயங்கள் மீண்டும் நிகழாத வகையில் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு காவல்துறைமா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் ஊடாக கோரப்பட்டுள்ளது.