முறையற்ற ஆட்சியே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் : எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு
முறையற்ற ஆட்சியே பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் (03) பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 82 ஆவது கட்டமாக,அக்மீமன இஹலகொட ஸ்ரீ சுமங்கலா மாதிரி கல்லூரியில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு பேசியிருந்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,"வளங்களும் வருமானங்களும் சமனாக பகிர்ந்து செல்லும்,இனம்,மதம்,சாதி,வர்க்கம்,குலம்,கட்சி,அந்தஸ்து என்ற பேதமின்றி நாம் கைகோர்த்து வளமான சௌபாக்கியமான தேசத்தை உருவாக்க வேண்டும்.
அதிக கடன் சுமை
சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் நலன் கிட்டும்,நலன் பகிர்ந்தளிக்கப்படும் புதிய வளமான நாட்டைக் கட்டியெழுப்ப நாமனைவரும் கைகோர்ப்போம்.
ஜப்பானை அதிக கடன் சுமை கொண்டிருந்த நாடு என்று சொல்லலாம்.அந்த கடனை எடுத்து இலாபகரமான முதலீடுகளை செய்தனர்.ஜப்பான் கடன் எடுத்து கப்பல்கள் வருகை தராத துறைமுகங்கள்,விமானங்கள் வருகை தராத விமான நிலையங்கள், கிரிக்கெட் இல்லாத கிரிக்கெட் மைதானங்கள்,மாநாடுகள் நடக்காத மாநாட்டு மண்டபங்கள்,பெயர் பதிப்பதற்காக தாமரை கோபுரங்களை நிர்மானிக்கவில்லை.அவர்கள் தாம் பெற்ற கடனைச் செலுத்த முடியுமான நாட்டுக்கு நீடித்த அடைவுகளை பெற்றுத் தரும் ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகளையே நிறுவினர்.
எமது நாட்டில் திறந்த பொருளாதார கொள்கை 1970 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, 1986 இல் வியட்நாமும் திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியது.
எமக்கு பின்னர் திறந்த பொருளாதாரத்திற்கு நுழைந்த வியட்நாம் இன்று கோடிக்கணக்கான நேரடி முதலீடுகளை பெற்று வருகிறது.
ஸ்மார்ட் பாடசாலைகள்
நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதின் முதற்கட்டமாக நாட்டிலுள்ள அரச பாடசாலைகளை ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற்றுவோம்.
களவும்,திருட்டும்,மோசடியும்,ஊழலும் எமது நாட்டில் இல்லாமல் இருந்தால் எமது நாட்டுக்கு உதவ பல வெளிநாட்டவர்கள் மட்டுமன்றி இலங்கையர்கள் பலரும் இருக்கின்றனர்.
1800 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கல்வி கற்கும் இஹலகொட சுமங்கல பாடசாலையில் ஒரு கணினி(Desktop) கூட இல்லை, வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக வெளிநாட்டு பயணங்களுக்கு மேலும் 200 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விடயங்களை நாம் அடையாளப்படுத்த வேண்டும்,என்றாலும் அவ்வாறானதொன்று நடப்பதாக தெரியவில்லை." என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |