நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் சிறிலங்கா நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய சிறிலங்கா நாடாளுமன்றத்தை எதிர்வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விவாதம்
குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவையின் திருத்தச் சட்டமூலம், தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், மத்தியஸ்த விசேட பகுதிகளைச் சார்ந்த பிணக்குகள் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மற்றும் நீதித்துறைச் சட்டத்தின் கீழ் கட்டளை என்பன எதிர்வரும் 3 ஆம் திகதி நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து, அன்று மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் தரப்பினால் கொண்டு வரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட மூன்று தீர்மானங்கள், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மற்றும் இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்புச் சட்டமூலம் என்பன எதிர்வரும் 4 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா துறைமுக அதிகாரசபை திருத்தச் சட்டமூலம், குடியியல் வான்செலவு திருத்தச் சட்டமூலம், குடியியல் வான்செலவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், கப்பற்றொழில் முகவர்களுக்கு கப்பற்சரக்கனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தாப் பொதுக்காவுநர்க்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன 5 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 6 ஆம் திகதி எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ‘பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்’ நடத்தப்படவிருப்பதாக குஷானி ரோஹனதீர மேலும் கூறியுள்ளார்.