சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு வாரத்திற்கு 3 நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்!
சுவிட்சர்லாந்தின் விமான நிறுவனமான எடெல்வைஸ் எயர் (Edelweiss Air), இலங்கைகான தனது குளிர்காலப் பருவத்திற்கான (Winter Season) விமானச் சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதனடிப்படையில், சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே வாரத்திற்கு மூன்று நேரடி விமானச் சேவைகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய (BIA) அதிகாரசபை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
இந்தநிலையில் எடெல்வைஸ் எயர் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சர்வதேசப் பயணிகளுக்கு இலங்கை சுற்றுலாப் அபிவிருத்திப் பணியகத்தினால் (SLTPB) ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரியக் கண்டி நடன நிகழ்ச்சியுடன் (Traditional Kandyan Dance) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டின் தனித்துவமான கலாசார உபசரிப்பை வழங்கும் நோக்கிலேயே இந்த வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் உச்சகட்டச் சுற்றுலாப் பருவத்தில் (Peak Tourism Season) சுவிட்சர்லாந்திலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் இரு நாடுகளுக்குமிடையிலான நேரடி வான்வழித் தொடர்பை வலுப்படுத்துவதற்கும் எடெல்வைஸ் எயாரின் இந்த மீள்வருகை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |