பிரான்ஸ் தலைநகரில் சிறப்புற நடைபெற்ற ஈழத்து தமிழ்க் கலாசார பாரம்பரிய முத்தமிழ் விழா
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நடாத்திய 27-வது ஈழத்து தமிழ்க்கலாசார பாரம்பரியக் கூறுகள் நிறைந்த முத்தமிழ் விழா, கடந்த 2026 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி, பாரிசு மாநகரத்தில் மிகுந்த கோலாகலத்துடனும் சிறப்புடனும் நடைபெற்றது.
பிரான்சில் இயங்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் கீழ் செயற்படும் 70 இற்கும் மேற்பட்ட தமிழ்ச்சோலைகள், 6500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள், 700 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட தமிழ்ச்சோலைக் குடும்பத்திலிருந்து, 700 இற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் விழாவில் நேரடியாகப் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த விழா
இவ்விழா, பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. அழிந்து வரும் ஈழத்துத் தமிழ்ப்பாரம்பரியக் கலைகளையும், ஈழத்து மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ள அழிக்கவொண்ணா வலிகளையும், நாடகங்கள், வழக்காடு மன்றங்கள், கூத்து, நடனங்கள் போன்ற கலை வடிவங்களின் ஊடாக உணர்வுபூர்வமாக மேடையேற்றியமை, விழாவின் முக்கிய அம்சமாக அமைந்தது.

விழா, “இன்னியம்” எனப்படும் ஈழத்துப் பாரம்பரிய நடனத்துடனும் இசைக்கருவிகளுடனும் கூடிய வரவேற்பு அணிவகுப்புடன் தொடங்கியது.
40-ற்கும் மேற்பட்ட கலை நிகழ்வுகள்
அதனைத் தொடர்ந்து காவடி ஆட்டம், நாட்டுக்கூத்து, ஊரக நடனங்கள், பரத நடனங்கள், வழக்காடு மன்றம் உள்ளிட்ட 40-ற்கும் மேற்பட்ட கலை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன.

இங்கு பிறந்து வளர்ந்த தமிழ்ப் பிள்ளைகள், அழகிய மற்றும் தெளிவான தமிழ் மொழியில் நிகழ்வுகளை விளக்கித் தொகுத்து வழங்கியமை, “தமிழ் அழியாது தலைமுறை கடந்தும் உயிர்ப்புடன் வாழும். நீளும்” என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.
தமிழ்மொழியையும் தேசப்பற்றையும் சுமந்து செல்லும் பெரும் சக்தி
இந்த விழாவின் மற்றுமொரு சிறப்பாகத்,தமிழியல் இளம் கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொண்டுவரும் 50 இற்கும் மேற்பட்ட இளையோர் முழு நிகழ்ச்சியையும் மிகுந்த நேர்த்தியுடனும் சீரமைவுடனும் முன்னின்று வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

இது, எதிர்காலத்தில் எமது இளையோர் தமிழ்மொழியையும் தேசப்பற்றையும் சுமந்து செல்லும் பெரும் சக்தியாக உருவெடுப்பார்கள் என்பதற்கான வலுவான எடுத்துக்காட்டாகவும் , தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தூரநோக்குச் சிந்தனையுடனான வழிகாட்டுதலின் வெற்றியாகவும் பரவலாகப் பாராட்டப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







