இலங்கையில் தொடரும் இனப்படுகொலை - ஈழத்தமிழ் ஏதிலிகள் இன்று முக்கிய சந்திப்பு
இன்று தமிழ் ஏதிலிகள் கழகத்தினருடன் இணைந்து தனித்தனியான வெவ்வேறு அனுபவங்களை கொண்ட ஐந்து ஈழத் தமிழ் ஏதிலிகள், செனட்டர் ஜோடன் ஸ்டீல் ஜோன், செனட்டர் விக்டோரியா ரைஸ் மற்றும் அவர்களது குழுவினரையும் சந்தித்தனர்.
அத்தோடு அந்த ஏதிலிகள் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் லிடியா தோப் அவர்களையும் தொழிற்கட்சி அமைச்சர் பீட்டர் ஹாகில் அவர்களையும் சந்தித்து உரையாடினார்கள்.
அகதி தஞ்சம் கோரல்
இந்த சந்திப்பில் ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கு, இலங்கையில் அவர்கள் கடந்து வந்த கடினமான அனுபவங்களையும் அவுஸ்திரேலியாவில் நிரந்தர பாதுகாப்பு விசாவுக்கான அகதி தஞ்சம் கோரலில் முகம் கொடுத்த பிரச்சினைகளையும் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.
இலங்கையில் கொடுங்கோன்மை அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்து வாழ்ந்து வருவதன் விளைவாக இன்று வரை தொடர்ந்து வரும் இனப்படுகொலையையும் ஏதிலிகள் தெரியப்படுத்தினர்.
அத்துடன் அவர்கள் அவுஸ்திரேலிய வெளிவிவகார துறையின் இலங்கை தொடர்பான பிழையான தகவல்கள் எமது தமிழ் ஏதிலிகளை மீண்டும் தமக்கு பாதுகாப்பற்ற இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு வழி வகுத்ததாக தெரிவித்துள்ளனர்.
இனப்படுகொலை
தமிழ் ஏதிலிகள் கழகமும் இலங்கையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலைகள் மற்றும் இதனால் ஈழத் தமிழர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தனர்.
அவ்வறிக்கையில் அவுஸ்திரேலிய வெளி விவகார துறையினரின் இலங்கை தொடர்பான கொள்கை நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய அவசியத்தினை விளங்கப்படுத்தும் நிபுணர்களின் அறிக்கையும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
அத்துடன் தமிழீழத்தில் இன்றுவரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இனப்படுகொலைகள் தொடர்பாகவும் கலந்துரையாடல் நடைபெற்றது.