விரைவில் மீண்டுமொரு தாக்குதல்! பகிரங்கமாக எச்சரிக்கிறார் ஞானசார தேரர்
இலங்கையில் மற்றுமொரு தாக்குதல் சம்பவம் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதன் போது கருத்து வெளியிட்ட அவர், அடிப்படைவாத கருத்துக்களால் ஆயுதம் தரித்த குழுக்கள் இதுவரை செயலற்றதாக்கப்படவில்லை. இதனால் நாட்டில் மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை. அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான பிரதான சூத்திரதாரிகள் இன்றும் வௌியில் இருக்கின்றனர்.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவால் எமக்கும் வழக்கு தொடரப் போவதாக அண்மையில் பிரதான பத்திரிகையொன்றில் செய்தி வௌியாகியிருந்தது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவில் எம்மை குற்றவாளிகளாக மக்கள் எதிர்பார்க்கவில்லை.
நாம் என்ன தவறு செய்தோம் - இவ்வாறான விடயங்களுக்கு எமது மக்கள் முகங்கொடுக்க நேரிடும் என்பதை நாம் தொடர்ச்சியாகவே கூறி வந்தோம் என்றார்.